குமரி:சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் படகில் சென்று பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலாப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக வருவதாலும், படகில் பயணம் செய்ய நீண்ட நேரம் வரிசையில் நின்று, சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுவதைக்கருத்தில் கொண்டும், கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 நவீன சுற்றுலா படகுகள் வாங்கப்பட்டன. ஆனால், இந்த சுற்றுலாப் படகுகளை கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் பயன்படுத்தப்படவில்லை எனக்கூறப்படுகிறது.