தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் கடல் அலையில் சிக்கி 2 சுற்றுலாப் பயணிகள் பலி! - tourist

Bangalore tourist drowned in Kanyakumari: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட மற்றொரு பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

two Bangalore tourist lost their lives after drowned in the waves at kanyakumari
Bengaluru tourist drowned in sea wave

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 6:53 PM IST

Updated : Sep 3, 2023, 7:21 PM IST

கன்னியாகுமரி: தமிழகம், இந்தியாவின் பிறபகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், குமரியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளைப் பார்ப்பதோடு, கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்வதும் வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தொடர் விடுமுறை என்பதாலும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாகவும் இன்று (செப்டம்பர் 3) கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

இந்நிலையில், கடலில் குளித்துக் கொண்டிருந்த பயணிகளில், யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு பெண் உள்பட 3 நபர்கள் ராட்சத கடல் அலையில் சிக்கினர். இந்த சம்பவத்தில் இருவர் அலையில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் அலையில் சிக்கிய பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் மற்றும் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அலையில் சிக்கி உயிரிழந்த பயணிகள் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு டெக்னோ பார்க் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மணி (30), சுரேஷ் (30), பிந்து (25) உள்பட 10 பேர் நேற்று (செப்டம்பர் 2) சுற்றுலாவாக வேனில் கன்னியாகுமரிக்கு வந்து உள்ளனர். தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள் இன்று (செப்டம்பர் 3) கன்னியாகுமரி கோவளம் கடற்கரை பகுதியை பார்க்கச் சென்று உள்ளனர்.

இதையும் படிங்க:"காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்" - பாஜகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

இதனையடுத்து 10 பேரும் கடலில் இறங்கி குளித்து உள்ளனர். அப்போது மணி, சுரேஷ், பிந்து ஆகியோர் கடலில் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கடலில் அலை பலமாக இருந்ததையும் அவர்கள் பொருட்படுத்தாமல் அவர்கள் குளித்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வந்த ராட்சத அலையில் 3 பேரும் சிக்கியுள்ளனர். இதைப் பார்த்த கடலில் குளித்து கொண்டிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

இதைக்கண்ட மீனவர்கள் மற்றும் சில நபர்கள் துணிச்சலாக செயல்பட்டு 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் பிந்து என்ற பெண்மணியை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. மேலும் மணி மற்றும் சுரேஷ் ஆகியோரை கடல் அலை இழுத்துச் சென்றது. இது குறித்து கன்னியாகுமரி கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது மற்றொரு அலை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேரையும் கரைக்கு கொண்டு வந்துள்ளது. பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மணி மற்றும் சுரேஷ் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது பிந்து கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அலையில் சிக்கி உயிரிழந்த இருவர் உடலையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அலையில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் பிந்து திருமணம் ஆகாதவர். உயிரிழந்தவர்களில் மணிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும், சுரேஷ் திருமணமானவர் எனத் தெரியவந்துள்ளது. பெங்களூரில் இருந்து குமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் இருவர் பலியான சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கும்பகோணம் துக்காச்சி கோயில் கும்பாபிஷேகம்.. அனைத்து மதத்தினரும் பங்கேற்று சாமி தரிசனம்.. இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Last Updated : Sep 3, 2023, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details