குமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தின் இரையுமன்துறை மீன் இறங்கு தளத்தில் லட்சத்தீவு பதிவு எண் கொண்ட விசைப்படகு ஒன்று கடந்த ஜன. 8ஆம் தேதி முதல் படகுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த விசைப்படகில் கடல் மார்க்கமாக கடத்தி செல்ல சாக்கு மூட்டைகளில் மஞ்சள் மறைத்து வைத்திருப்பதாக நித்திரவிளை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இரையுமன்துறை மீன் இறங்குதள பகுதிக்கு வந்த நித்திரவிளை காவல் துறையினர் படகை சோதனை செய்தனர்.
படகை சோதனை செய்யும் காவல்துறையினர் அப்போது படகின் உள்ளே மீன்கள் பிடித்து சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கிற்குள் 125 சாக்கு மூட்டைகளில் சுமார் 6 டன் எடைகொண்ட மஞ்சள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மஞ்சள் மற்றும் படகை பறிமுதல் செய்த காவல் துறையினர், படகின் உரிமையாளர் யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த விசைப்படகு லட்சத்தீவு பகுதியை சேர்ந்த அன்வர் என்பவருக்கு சொந்தமானது என்பதும், தற்போது அந்த படகை ஒப்பந்த அடிப்படையில் குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோபு என்பவர் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து வள்ளவிளையை சேர்ந்த ஜோபுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இந்த மஞ்சள்கள் எந்த நாட்டிற்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தனர் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.