கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கோதையாறு, குற்றியார் உள்பட்ட ஆறு மலையோர கிராமங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு அறிவித்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு கழிவறை கட்டுவதற்காக பேச்சிப் பாறை ஊராட்சியிலிருந்து கட்டுமான பொருள்களை வாகனத்தில் கொண்டுச் சென்றனர்.
வனத்துறை அனுமதி மறுப்பு - மலைவாழ் மக்கள் சாலை மறியல் - கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அருகே கட்டுமான பொருள்களை கொண்டுச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த வாகனத்தை சீறோ பாயின்ட் வன சோதனைச் சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், இந்த வாகனத்தை மலை கிராமங்களுக்கு செல்ல வனத்துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள், வனத்துறை சோதனைச் சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த அருமனை காவல்துறையினர் மலைவாழ் மக்களிடமும், வனத்துறையினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கட்டுமான பொருள்களை கொண்டுச் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.