இந்தியாவில் வணிகத்தை மேற்கொள்ள வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக தங்களது ஆதிக்கத்தினை செலுத்த ஆரம்பித்து கடைசியில் இந்தியாவினை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அதன் பிறகு ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து வெளிவந்த இந்தியர்களுக்கு இறுதியாக ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது.
இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி சுதந்திரம் பெறுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே குமரி மாவட்டத்தில் டச்சுப் படைகளை எதிர்த்து வெற்றிவாகை சூடி சுதந்திரத்திற்கு வித்திட்ட வீர வரலாறு உள்ளது. இந்த வெற்றியின் நினைவாக நடப்பட்ட வெற்றி தூணுக்கு இப்போதும் இந்திய ராணுவத்தால் இந்த வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா ஆட்சி காலத்தில் தற்போதைய குமரி மாவட்ட பகுதிகளைக் கைப்பற்ற டச்சு நாட்டு படைகள் கடல் மார்க்கமாக அதன் தளபதி டிலணாய் தலைமையில் குளச்சலை நோக்கி வந்தனர். திருவிதாங்கூர் மன்னர் படைகளிடம் அப்போது நவீன ரக பீரங்கிகள் ஏதும் இல்லை. ஆனால் டச்சு படைகளிடம் துப்பாக்கிகள் இருந்தன.
இதனால் டச்சு படைகளை எதிர்கொள்ள திருவிதாங்கூர் படைகளுக்கு இயலாத சூழல் இருந்தது. மன்னரின் மதிநுட்பத்தால் போரில் வியூகம் அமைக்கப்பட்டது. அதன்படி ஏராளமான கட்டைவண்டிகளில் பனை மரத் தடிகளை வைத்து பிராங்கிகள் போல் குளச்சல் கடற்கரையில் அணிவகுத்து நிறுத்திவைத்தார்.