கன்னியாகுமரி: தென்னக ரயில்வேயில் அதிக வருவாய் கொடுத்து வரும் நாகர்கோவில் ரயில்வே நிலையம் இருந்தும் கூட பராமரிப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் இல்லாததால் பழுதாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒருவாரமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுதடைந்து இருந்த நிலையில் பயணிகள் தங்கள் சுமைகளுடன் ரயிலில் சென்று சேர பெரும் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று (செப். 27) நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் ரயில் சென்ற பின்னரும் 3 மணி நேரமாக ரயில்வே கேட் திறக்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். நாகர்கோவில், பார்வதிபுரம் அருகே கணியாகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட இலந்தையடி, கணியாகுளம், பாறையடி போன்ற பகுதிக்கு செல்ல சாலை வசதி உள்ளது.
அந்த வழியாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதை அமைந்துள்ளது. இந்த சாலையில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்கள் செல்கின்ற நேரத்தில் மட்டும் இந்த கேட் மூடப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் பொதுமக்கள், வாகனங்கள் செல்ல வசதியாக கேட் திறந்திருப்பது வழக்கம். இதற்காக ரயில்வே பணியாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் இந்த ரயில்வே கேட் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென்று மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது. ரயில் சென்ற பிறகு திறக்கப்பட வேண்டிய நிலையில் தொடர்ந்து மூடப்பட்டே இருந்தது. அந்த வழியாக வந்தவர்கள் வெகு நேரம் காத்திருந்தனர்.
பின்னர் ஒரு சிலர் வீபரீதத்தை அறியாமல் தண்டவாளத்தை கடந்து சென்றனர். ஆனால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். கேட் உயர்ந்து தாழ்வதற்கு பொருத்தப்பட்டுள்ள எந்திரம் பழுதானதால் மூடப்பட்ட கேட் திறக்க முடியவில்லை என தெரிகிறது. பலர் திரும்பி வேறு வழியாக சென்றனர். இதனால் அந்த வழியாக வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதையும் படிங்க:தரமற்ற கட்டுமானப் பணியால் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது