கன்னியாகுமரி: நாகர்கோவில் வடசேரி பகுதியில் 'கனகமூலம் காய்கனிச் சந்தை' செயல்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் கனகமூலம் மகாராஜாவால் துவங்கப்பட்டதால், இந்த சந்தைக்கு 'கனகமூலம் காய்கனிச் சந்தை' எனப் பெயர் வந்தது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு, திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் மன்னர், விவசாயிகளின் நலனுக்காக இந்த இடத்தில் சந்தை அமைத்து, அதன் மூலம் காய்கனி மற்றும் பொருள்கள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்வதோடு, கேரளாவிற்கு காய் கனிகளை கொண்டு செல்லும் நோக்கத்தில் துவக்கப்பட்டது.
அன்றைய காலத்தில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட சந்தை பிற்காலத்தில் 300க்கும் மேற்பட்ட கடைகளுடன் மிகப்பெரிய அளவில் இயங்கி வந்தது. பின்னர் கனகமூலம் சந்தையில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் மிகப்பெரிய சங்கம் அமைத்து, வடசேரி அடுத்துள்ள ஒழுகினசேரி பகுதியில் 'அப்டா' என்ற பெயரில் மிக பிரமாண்டமான சந்தை ஒன்றை ஆரம்பித்து கனகமூலம் சந்தையில் இருந்து, அங்கு மாறினர்.
ஆனாலும், வடசேரி பகுதியிலுள்ள அரசர்காலத்து கனகமூலம் சந்தையை விட்டு, இடம் பெயராமல் சுமார் 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்போதும் வியாபாரம் செய்து வருகின்றனர். கனகமூலம் சந்தையில் இருக்கும் வியாபாரிகள் காய், கனி வகைகளை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.