திருவள்ளுவர் சிலையைக் காண குவிந்த சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இந்த சில கடந்த 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஆண்டுமுழுவதும் இதனைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவார்கள்.
கடலில் திறந்த வெளியில் சிலை காணப்படுவதால், கடல் அலை, உப்புக்காற்று, வெயில் தாக்கம் என அனைத்து இயற்கை சூழல்களையும் எதிர்கொள்வதால், சிலை சேதமடையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது திருவள்ளுவர் சிலை சுத்தம் செய்யப்பட்டு ரசாயன கலவை கொண்டு பூசப்படும்.
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதிலிருந்து நான்கு முறை சிலை பராமரிப்புப் பணி நடைபெற்ற நிலையில், ஐந்தாவது முறையாக கடந்த ஆண்டு ஜூன் மாத பராமரிப்புப் பணிகள் தொடங்கின. ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் செய்யப்பட்டன. பராமரிப்புப் பணி காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
133 அடி உயரம் கொண்ட சிலையைச் சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு, முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்தனர். பின்னர் சிலையின் இணைப்புப் பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.
அதன் பிறகு காகிதக்கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு, சிலையில் படிந்துள்ள உப்பினை எடுக்கும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்து, ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயனக் கலவை பூசப்பட்டது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், சிலையைச் சுற்றி அமைக்கப்பட்ட இரும்புச் சாரம் பிரிக்கப்பட்டது.
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததால், மார்ச் 6ஆம் தேதி முதல் திருவள்ளுவர் சிலையைக் காண சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, 7 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திருவள்ளுவர் சிலையைக் காண சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுப்பொலிவுடன் காணப்படும் திருவள்ளுவர் சிலையைக் காண, உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குமரியில் குவிந்து வருகின்றனர். தமிழ் ஆர்வலர்கள், சுற்றுலாப்பயணிகள் பலரும் சுற்றுலாப் படகில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: வீடியோ: கருக்காடிப்பட்டியில் வடமாடு பிடிக்கும் ஜல்லிகட்டு போட்டி