சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் உள்நாடு, வெளிநாடு மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். கரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்படி சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் இங்குள்ள வியாபாரிகள் மற்றும் வியாபார நிறுவனப் பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்தனர். இந்நிலையில் கடந்த மாதத்திற்கு முன்பு, ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் கோயில்கள் மற்றும் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரத்தொடங்கினர்.
இந்நிலையில், சமீபத்தில் குமரி மாவட்டம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குமரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தீபாவளியை ஒட்டிய விடுமுறை தினங்களையொட்டி, கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர்.
கன்னியாகுமரிக்கு வந்தவர்கள் திரிவேணி சங்கமம் மற்றும் கடற்கரைப் பகுதியில் அமர்ந்து தங்கள் நேரத்தைச் செலவழித்தனர். பின்னர் அங்குள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கினர். இதனால் கடந்த சில மாதங்களாக வியாபாரங்கள் இல்லாமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த சிறுகடை வியாபாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமரிக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். ஆனால், சுற்றுலாப் படகு போக்குவரத்து தற்போது வரை தொடங்கப்படாததால், கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.