கன்னியாகுமரி: தென்மேற்கு வங்கக் கடல் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏற்பட்டு உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் நேற்று (டிச 17) இரவு முதல் கனமழையாகப் பெய்து வருகிறது.
இதனால் நாகர்கோவிலில் பல தெருக்களுக்குள் தண்ணீர் புகுந்தது வீடுகளை விட்டு மக்கள் வெளியே வராமல் தவித்த நிலையில் தீயணைப்பு படையினர் மிதவை படகுகள் மூலம் அவர்களை மீட்டு வந்தனர். இதே போன்று நாகர்கோவில் அருகே புளியடி கிராமம் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் இருந்து யாரும் வெளியே வர முடியாமல் கிராமத்துக்குள் முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாகக் கன்னிமார் பகுதியில் 153 மில்லி மீட்டர் மழையும் நாகர்கோவிலில் 146 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இந்த தொடர் மழையின் காரணமாக நாளை (டிச 18) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதுமட்டும் இல்லாது கன மழையின் காரணமாக நாளை (டிச 18) நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருவதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக மாறியது. நாகர்கோவில், சுசீந்திரம், திருப்பதி சாரம், மயிலாடி, அஞ்சுகிராமம் கொட்டாரம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டது.
இந்த நிலையில் அஞ்சு கிராமம் காவல் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் பல மணி நேரம் தவித்தனர். இதனை அடுத்து, போலீசார் இன்று (டிச.17) இரவு படகுகளைக் கொண்டு சென்று அவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு காவல்துறை சார்பில் இரவு உணவும் வழங்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து போலீசார் படகுகள் மூலம் பொதுமக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளார்களா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வெளுத்து வாங்கும் மழை: தண்ணீர் மிதக்கும் குடியிருப்பு பகுதிகள்.. நெல்லையின் முழு நிலவரம்..