கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,
‘தேர்தலுக்கு மட்டும் வந்து போகிறவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சியிலிருந்தாலும், இல்லை என்றாலும் மக்களோடு மக்களாக எந்நேரமும் காங்., திமுக இருக்கும். குமரி மாவட்டம் உருவாவதற்கு முன்பே, இம்மாவட்டம் தமிழ்நாட்டில் இணைவதற்கு ஆதரவு தந்த இயக்கம் திமுக.
நம்மை எதிர்ப்பவர்கள் ஆட்சியிலிருந்தபோது, தாங்கள் என்னென்ன திட்டங்களைச் செய்துள்ளோம் எனக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மாறாக, தனிப்பட்ட தாக்குதலோடு பேசி வருகின்றனர்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்தபோது திமுக, சேது சமுத்திர திட்டம், மண்டல் ஆணையம் அறிக்கை அமல்படுத்தப் பரிந்துரை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல நல்லத் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடியும், குமரித் தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனும் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை. வாயில் வடை சுடுபவர் மோடி என்றால், வாயில் அடை சுடுபவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களுக்குப் பயன்படும் எந்தவொரு திட்டமும் இல்லை. பாஜக தேர்தல் அறிக்கை ஒரு ஜீரோ. ஆனால் திமுக, தேர்தல் அறிக்கை ஹீரோ, ஹீரோயின் என்றால், காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோ.
மத்தியில் சர்வாதிகார ஆட்சியை மோடியும், தமிழ்நாட்டில் உதவாக்கரை ஆட்சியை முதலமைச்சரும் நடத்துகின்றனர். கருணாநிதியின் இறப்பில் கூட சித்ரவதை செய்த கூட்டம்தான் தற்போதுள்ள ஆட்சி. சுமார் ஆறு அடி நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்காமல், அதிலும் அரசியல் செய்த இவர்களுக்கு, உயர் நீதிமன்றம் சரியான பாடம் புகட்டியது.
ஒருவேளை உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்காமலிருந்தால், எவ்வளவு தடைகள் வந்தாலும் அதைக் கடந்து நான், கருணாநிதி உடலைத் தூக்கிக் கொண்டு கடற்கரைக்குச் செல்வது என்று முடிவெடுத்து இருந்தேன்’ என்று தன் உரையை முடித்துக் கொண்டார்.
நாகல்கோயில் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்