கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகள், இங்குள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களை ரசித்துவிட்டு செல்கின்றனர்.
சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக, கன்னியாகுமரியில் 100க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கன்னியாகுமரி காவல்துறையினர், ஆணின் சட்டைப்பையில் இருந்த அடையாள ஆவணங்களை சரிபார்த்தபோது, அவரது பெயர் போஸ் என்பதும், கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட காவல்துறையில் டிரைவராக பணியாற்றி வருவரும் தெரியவந்தது.
விசாரணையில், போஸ் அப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் பெண் ஒருவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதிக்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
அவரை மீட்ட காவல்துறையினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்ட போஸ் உடலையும் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். போஸ் தற்கொலை குறித்து கேரள மாநில காவல் துறைக்கு, கன்னியாகுமரி காவல்துறையினர் தகவல் அளித்தனர்.