கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்குத் தினமும் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு கடல் நடுவே அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைப் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்குச் சுற்றுலாப் பயணிகள் தினசரி சென்று பார்த்து வருவதற்குச் சுற்றுலா படகுகளைப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன.
விடுமுறைக் காலங்கள் பண்டிகை காலங்கள் சுற்றுலா சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நேரங்களில் சுற்றுலா படகுகளில் செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்ட கியூ வரிசையில் நின்று காத்து இருந்து சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா படகுகளில் பயணம் செய்து வருகின்றனர்.