கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முழுவதும் அரிக்கொம்பன் யானையால் வனத்துறையினர் பல குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். யானையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அதன் நடமாட்டம் குறித்த தகவல்களை தெரிவித்து வந்தனர், யானையின் வீடியோவையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் தற்போது கத்தி போய் வால் வந்த கதையாக கடந்த சில தினங்களாக புலி நடமாட்டம் காரணமாக வனத்துறையினர் காடுகளில் முகாம் அமைத்து தேடி வருகின்றனர்.
கடந்த 20 தினங்களாக புலி மற்றும் சிறுத்தை நட மாட்டத்தால் வனப் பகுதியில் வாழும் மக்கள் கதி கலங்கி போய் உள்ளனர். பேச்சிப்பாறை அருகே முக்கறைகல், சிற்றாறு, சிலோன் காலனி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் கடந்த சில நாட்களாக புலிகள் அட்டகாசம் செய்து வருகிறது. அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் சுற்றி தெரியும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் புலியை பிடிக்கும் வகையில் ஆட்டு கொட்டகை போன்ற தோற்றம் உடைய கூண்டு ஒன்றை வடிவமைத்து 2 இடங்களில் வைத்துள்ளனர். அந்த கூண்டுக்குள் 2 ஆடுகளையும் கட்டி வைத்துள்ளனர். 24 மணி நேரமும் அந்த கூண்டை வனத்துறை கண்காணித்து வருகிறார்கள். புலியை பிடிக்க எலைட் படையினரும், டாக்டர்கள் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் நெல்லையில் இருந்து வந்த விரைவு படையினரும் புலியை தேடி வருகிறார்கள். பேச்சிப்பாறை மூக்கரைக்கல் பகுதியில் டிரோன் கேமரா மூலமாக புலியை தேடும் பணி 2 நாட்களாக நடந்தது ஆனால் புலி சிக்கவில்லை.
சிற்றாறு பகுதியில் புலி குறித்த அச்சம் அடங்குவதற்குள், கீரிப்பாறை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு ரப்பர் தோட்ட தொழிலாளிகள் வசிக்கும் லேபர் காலனியில் ஒரு ரப்பர் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டின் பின்பக்கம் கட்டப்பட்டு இருந்த நாயை சிறுத்தை கடித்து தூக்கி சென்றதை அந்த வீட்டின் உரிமையாளர் பார்த்து உள்ளதாக தெரியவந்தது.
அதற்கு அடுத்த நாள் அதே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை அடித்ததில் ஆடு ஒன்று ஒரு கண் பார்வை இழந்தது. மேலும் கன்று குட்டி ஒன்றையும் சிறுத்தை அடித்துச் சென்றதாக தகவல் பரவியது. அந்த சிறுத்தையுடன் ஒரு குட்டியும் உள்ளதாகவும் இரண்டு வாத்துக்களை பிடித்து சென்றதாக அங்கு வசிப்பவர்கள் கூறியதை அடுத்து வனத்துறையினர் அந்த பகுதியிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சிற்றாறு, கீரிபாறை, வனப்பகுதிகளில் குடியிருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் சமீப நாட்களாக இரவு வேலைகளில் வீட்டை விட்டு வெளியே வருவதே கிடையாது. பகல் வேளையிலும் கூட தனியாக எங்கும் செல்ல முடியாத அளவிற்கு இந்த பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
மாவட்ட வனத்துறை இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு புலிகளைப் பிடிக்க கூண்டுகள் வைத்தும், சுமார் 30 கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டும் வருகின்றனர். வனத்துறையினர் ஷிப்ட் முறையில் வன பகுதிகளை இரண்டு குழுக்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதேபோன்று கீரிப்பாறை பகுதிகளில் சிறுத்தை புலிகளைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.