இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் உப்பை வாங்கக் கூடாது என்று 1909ஆம் ஆண்டு திருவனந்தபுரம் திருநாள் மகாராஜா கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உப்பளம் அமைத்து உப்புத் தொழிலை தொடங்கிவைத்தார். அன்றிலிருந்து இன்று வரை இப்பகுதியில் உப்பு தொழில் நடைபெற்றுவருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு வரை இப்பகுதியில் 80 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டவந்த நிலையில் தற்போது 10 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதற்கு காரணம் உப்பளங்கள் மறு ஒப்பந்தம் செய்து காலநீட்டிப்பு செய்யப்படாமல் இருப்பதே என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் கோவளம், வட்டகோட்டை பகுதியிலும் உப்பு தொழில் நடைபெறவில்லை. தற்போது ஒரு டன்னுக்கு 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விலையிருந்தாலும் தொழிலாளர்கள் சம்பளத்தை கணக்கிடும்போது உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
உப்பு தொழில் அழியும் அபாயம் தற்போது உப்பு உற்பத்தி உணவுக்காக மட்டுமல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எனவே அரசு உடனடியாக செயல்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உப்பளங்களை சிறு தொழிலாளர்களுக்கு மறு குத்தகை கொடுத்து கால நீட்டிப்பு செய்து, அழிந்துவரும் உப்புத் தொழிலை காக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.