கன்னியாகுமரி:விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்கள் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 45 டன்கள் பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. இந்தாண்டு ஓணம் பண்டிகை வரும் ஆக.30 ஆம் தேதி தொடங்கி செப்.8 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இந்த நாள்களில் கேரளா முழுவதும் வீடுகள், கோயில்கள், பொது இடங்களில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோலங்கள் போடப்படுவது வழக்கம். குறிப்பாக விழாவிற்கான பூக்கள் தோவாளை பூ சந்தையில் இருந்துதே வாங்கப்படும். இதன் காரணமாகவே ஓணம் நாள்களில் தோவோளை சந்தை களைகட்டி காணப்படும். இதனிடையே பூக்களுக்கான முன் பதிவுகள் ஆன்லைன் முறைகளிலும் செய்யப்படும் வகையில் தோவாளை மலர் சந்தையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆன்லைன் மூலம் கேரளா மக்கள் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். அதேவேளையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் வரவு அதிகரித்துள்ளது.