கன்னியாகுமரி: தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். இங்கு, தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல ’டன்’ பூக்கள் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் தோவாளை சந்தையில் இருந்தும் கேரளம் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்பொழுது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை சீசனையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பிரச்னை நிலவியதால் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணியவில்லை. ஆனால், இந்த ஆண்டு சற்று அமைதியான சூழல் நிலவுவதால் அதிகளவில் பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிந்துள்ளனர். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கான பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.