கன்னியாகுமரி:நாட்டின் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அம்ரீத்பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், நாட்டில் 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.881.42 கோடி மதிப்பில், 125 கருத்துருக்கள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டன.
அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை கிண்டி, அரக்கோணம், ஈரோடு, கரூர், கோவை வடக்கு, தஞ்சாவூர், தென்காசி, நாகர்கோவில் சந்திப்பு உள்ளிட்ட 60 நிலையங்கள், கேரளாவில் சொரனூர், தலைசேரி, குட்டிப்புரம் உள்பட 26 நிலையங்கள், புதுச்சேரியில் மாஹி, காரைக்கால் ஆகிய 2 நிலையங்கள், கர்நாடகாவில் மங்களூர், ஆந்திராவில் சூலூர் பேட்டை நிலையம் என மொத்தம் 90 நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கிழ் பயணிகள் காத்திருப்போர் அறைகள், ரயில் நிலையத்தில் சிற்றுண்டி கடைகள் அல்லது சிறிய அளவிலான கடைகள் அமைக்கப்படும். ஒரு ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 கடைகள் திறக்கப்படும். ரயில் நிலையத்தின் முக்கியமான இடங்களில் ரயில் வருகை மற்றும் ரயில் புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்களைக் காட்சிப்படுத்தும் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்படும்.
மேலும், பயணிகளைக் கவரும் வகையில் இயற்கை பூங்காக்கள், செடிகள், மரக் கன்றுகள் நடப்பட்டு அழகுப்படுத்தபடும். அனைத்துப் பகுதிகளிலும் 600 மீட்டர் நீளம் கொண்ட உயர்நிலை நடைமேடை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.