கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 27) பரப்புரையில் ஈடுபட்டார். இந்தப் பரப்புரையின்போது அவர், "கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரைவைத் தொகுதி வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, குளச்சல் குமரி பா.ரமேஷ், கன்னியாகுமரி தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் ஜாண்தங்கம், விளவங்கோடு பாஜக வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகிய அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
ஏற்கனவே, இந்தத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றவர். தளவாய் சுந்தரம் முன்னாள் அமைச்சராக இருந்தவர். இருவரும் குமரி மாவட்டம் ஏற்றம்பெற பல்வேறு முயற்சிகளை எடுத்தவர்கள். அவர்களுக்கு வாய்ப்பளியுங்கள். அதிமுக ஆட்சியில் நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக்கப்பட்டது.
குமரியில் அதிகமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவை, திமுக ஆட்சியில் தொடர் மின் வெட்டு காரணமாக பாதிக்கப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தடையில்லா மின்சாரம் அளிக்கப்படும். மீனவர்களுக்கு காங்கிரீட் வீடுகள், வரி விலக்கோடு வழங்கப்படும் டீசல் 18,000 லிட்டரிலிருந்து 20,000 லிட்டராக வழங்கப்படும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிதி ரூ. 5000லிருந்து ரூ.7,500ஆக அதிகரிக்கப்படும். மீனவர்களுக்கென தனி வங்கி அமைக்கப்படும். மீனவர் உயிரிழப்பு நிவாரணம் ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்படும். அத்துடன் சுற்றுலா மாவட்டமான குமரியில் கூடுதல் சுற்றுலா திட்டங்கள் மேம்படுத்தப்படும். அதில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு இடையில் ரூ.20 கோடியில் பாலம் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார். அதையடுத்து அவர், "திமுகவினர் குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படும் என பரப்புரை செய்வது முற்றிலும் பொய்யானது. மக்கள் இதை நம்ப வேண்டாம். இந்தத் திட்டம் சிறப்பு அலுவலர்களால் ரத்துச் செய்யப்பட்ட திட்டம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் பழனிசாமிக்கு கோவில்பட்டியில் எதிர்ப்பு