கன்னியாகுமரி: பாரதிய ஜனதா கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று(செப்.15) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”2004ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீரை இணைக்கும் வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் சாலை பணிகள் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் தென்கோடியையும் வடகோடியையும் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டது. ஆனால் இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. உள்ளூர் அரசியல் மற்றும் பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. இதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பணிகள் தொடங்கப்பட்டு துரிதப்படுத்தப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே நரிக்குளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இந்த பாலத்திற்காக நாட்டப்பட்ட கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர். இது ஒரு ஒழுக்கமற்ற செயலாகும்.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு சாலை பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டு தற்போது வேலைகள் நடைபெற்று வருகிறது. காவல்கிணறு - களியக்காவிளை வரை உள்ள நான்கு வழிச் சாலை பணிகள் தற்போது மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.