சுனாமியை விட மோசம்.. இதுவரை 28 மரணம்.. அச்சத்தில் மீனவர்கள் கன்னியாகுமரி: குமரி முனையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது தேங்காப்பட்டினம் மீன்பிடித்துறைமுகம். வள்ளவிளை, சின்னத்துறை, மார்த்தாண்டம்துறை, இறையுமன்துறை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது இந்த துறைமுகம்.
தேங்காப்பட்டினத்தில் உலகத்தரம் வாய்ந்த மீன்பிடித்துறைமுகம் வேண்டும் என்ற மீனவர்களின் பல ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக 2010ம் ஆண்டு பணிகள் துவக்கப்பட்டு 2019ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்த மீன்பிடித்துறைமுகம். எதற்காக போராடினார்களோ அந்த துறைமுகமே தங்களுக்கு எமனாக மாறும் என மீனவர்கள் ஒரு போதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆம் துறைமுக கட்டுமானத்தில் நிகழ்ந்த ஒரு தவறு இது வரையிலும் 28 உயிர்களை பலி கொண்டுள்ளது. தாமிரபரணி ஆறு கடலில் கலக்குமிடத்தில் அலைகளை கழிமுகத்திலிருந்து மறைக்கும் விதமாக துறைமுகம் கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படித்தான் திட்டமும் தீட்டப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்பட்ட விதமோ வேறு. தற்போதும் கூகுள் மேப் மூலம் பார்த்தாலே அப்பட்டமாக தெரியும் அளவிற்கு துறைமுகத்தின் குறைபாடு உள்ளது.
கடலின் உள்பகுதியில் இருக்க வேண்டிய கட்டுமானம் கரை பகுதியுடனே நிறைவடைகிறது. அதே போன்று ஆற்று நீர் கடலில் சேரும் இடத்தில் இத்துறைமுகம் அமைந்து உள்ளது. இதனால் ஆற்றில் அடித்துவரப்படும் மணல் முகத்துவாரத்தில் படிந்து விடுகிறது. கரையை நோக்கி வரும் படகுகளும், புறப்படும் படகுகளும் தூக்கி வீசப்பட்டு உயிரிழக்கின்றனர்.
தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அலை சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் பலி அதிலும் 2019ம் ஆண்டில் துறைமுகம் திறக்கப்பட்ட முதல் நாளே படகுகள் சேதமடைந்தது தான் அவலம். இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய மீனவர்கள், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் உயிரிழப்புக்கான அபாயம் அதிகம் என குறிப்பிடுகின்றனர். போராட்டங்கள் நடந்தால் கற்களை லாரிகளில் கொண்டு வந்து கொட்டும் அதிகாரிகள் சில நாட்களில் பணிகளை தொடராமல் கைவிட்டு விடுகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர்.
இரையுமன்துறையைச் சேர்ந்த மீனவரான ஜீலியஸ் பேசும் போது, சொந்த ஊரில் மீன்பிடி துறைமுகம் இருந்தும் அகதிகள் போல கேரளாவிற்கும் அண்டை மாநிலங்களுக்கும் சென்று மீன்பிடித் தொழில் செய்து வருவதாக கூறினார். கடந்த நவம்பர் மாதம் 28வது முறையாக தேங்காப்பட்டினத்தில் உயிரிழப்பு நிகழ்ந்தது. அப்போது போராட்டம் நடத்திய மீனவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் கலைந்து போகச் செய்ததையும் நினைவு கூர்கிறார்.
மீனவர்களின் தொடர் போராட்டத்தால் சுமார் 270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. இருப்பினும் செயல்படாத உபகரணங்கள், கற்கள் இருப்பு இல்லை காரணம் காட்டி பணிகள் கைவிடப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்ட திமுகவினரின் வாக்குறுதிகளில் தேங்காப்பட்டினம் துறைமுகம் முக்கிய இடம் பிடித்திருந்தது.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் வரைபடம் ஆனால் வெற்றிக்கு பின்னர் தாங்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் மீனவர்கள். அத்தோடு போராட்டத்தில் முனைப்பாக இருந்தவர்களை அமைதிப்படுத்தும் வேலையும் நடந்ததாக கையறு நிலையில் இருக்கும் மீனவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை அணுகிய போது குவாரிகள் பிரச்சனை காரணமாக கற்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் கூடிய விரைவில் கட்டுமானம் சீர் செய்யப்படும் எனவும் கூறுகின்றனர்.
சுனாமி எதிர்பாராத இயற்கை பேரழிவு என்றால், செயற்கை பேரழிவான இந்த துறைமுகத்திற்கு தினம் தினம் அஞ்சி வாழ்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். புத்தாண்டில் கடல் அலை அதிகரிக்கும் நாட்களுக்கு முன்னதாக நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:18ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் - மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்