கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாய ஜெய்சன். இவர், தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அழகப்பபுரம், அரசு மருத்துவமனை ரோட்டில் ஐந்து சென்டு மனையும், வீடும் உள்ளது. அந்த வீட்டில் அவரது மனைவி, குழந்தைகள் வசித்து வருகின்றனர்.
ஜெய்சனுக்கும் அவரது உறவினர் ஆல்டன் என்பவருக்கும் பாதை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஜெய்சனின் மனைவியை, டிஎஸ்பி பாஸ்கரன் அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து ஆல்டனுக்கு 12 அடி பாதை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றதால் நவ.1 ஆம் தேதியன்று ஜெய்சன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த டிஎஸ்பி பாஸ்கரன், மரியாதையாக பாதை கொடுங்கள் இல்லை என்றால் மதிலையும் கேட்டையும் அவர்கள் உடைத்து விடுவார்கள் என ஜெய்சனின் மனைவியிடம் மிரட்டியுள்ளார்.
இருந்தும் அவர் சம்மதிக்காததால் மீண்டும் நவ.4 ஆம் தேதியன்று டிஎஸ்பி பாஸ்கரன் தனது அலுவலகத்திற்கு ஜெய்சனின் மனைவியை அழைத்து பாதை கொடுப்பேன் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு வற்புறித்தியுள்ளார்.
மேலும், கையெழுத்துப் போடவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். இதற்கு, ஜெய்சனின் மனைவி டிஎஸ்பி பாஸ்கரனிடம் நீதிமன்றம் மூலமாக தாங்கள் நிவாரணம் தேடிக் கொள்கிறோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.