கன்னியாகுமரி: திட்டுவிளையைச் சேர்ந்தவர் சபிதா. இவருடைய கணவர் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கே கட்டட ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். கோடை விடுமுறைக்காக கொல்லத்திலிருந்து சபிதா குழந்தைகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திட்டுவிளை ஊரில் தனது தாய் வீட்டிற்கு கடந்த மே மாதம் வந்துள்ளார்.
அந்த நேரத்தில் அவருடைய இரண்டாவது மகன் ஆதில் மே மாதம் 8ஆம் தேதி மர்மமான முறையில் குளத்தில் சடலத்தில் கண்டெடுக்கப்பட்டார். தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஆதிலின் நண்பன் மர்ம நபர்களுடன் சேர்ந்து தனது மகனை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளதாகவும் சிறுவனின் தாய் கூறினார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். ஆதிலை சிவப்பு நிறச்சட்டை அணிந்த ஒரு சிறுவன் அழைத்துச்சென்ற சிசிடிவி காட்சிகளும், பின்னர் அழைத்துச் சென்ற சிறுவன் மட்டும் தனி நபராக நடந்து வரும் காட்சிகளும் போலீசார் கையில் கிடைத்துள்ளன. ஆனால், கொலை விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காததால் மாணவர் ஆதிலின் மரணம் ஒரு மர்மமாகவே இருந்து வருவதாக திட்டுவிளை ஊர் மக்களும், உறவினர்களும் கூறுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட போலீசாரின் விசாரணையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்கள். இது சம்பந்தமாக திட்டுவிளையில் கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் போலீசாரை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் திட்டுவிளை ஊர் மக்கள் ஈடுபட்டும் தீர்வு கிடைக்கவில்லை.