கன்னியாகுமரி:தோவாளை மலர்ச் சந்தை, தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற சந்தைகளில் ஒன்று. குமரி மாவட்டம் மட்டும் இன்றி கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து தினமும் பல டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய பூ வர்த்தக சந்தையாக தோவாளை மலர்ச் சந்தை விளங்கி வருகிறது.
பண்டிகை காலங்கள், விசேஷ காலங்கள், திருமண நிகழ்வுகள் ஆகிய காலங்களில் பூக்களின் விலை இரண்டு, மூன்று மடங்கு என உயர்வது வழக்கம். அந்த வகையில் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவில்களிலும், வீடுகளிலும் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும். எனவே, பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.
அதே வேளையில் ஓசூர், ராயக்கோட்டை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற பூக்கள் வரத்தும் குறைந்து உள்ளது. இதனால் இந்த தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்து உள்ளது. நேற்று ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ, இன்று 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது.