தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காட்டுத் தீயை அணைக்க அரசு நவீன யுக்திகளை கையாள வேண்டும்' - சுற்றுச்சூழல் கல்வியாளர் வலியுறுத்தல் - காட்டுத் தீயை அணைக்கும் முறை

கன்னியாகுமரி: அறிவியல் வளர்ச்சியில் முன்னேறியுள்ள நிலையில், பழைய நடைமுறையை கைவிட்டு காட்டுத் தீயை அணைக்க அரசு நவீன யுக்திகளை கையாள வேண்டும் என சுற்றுச்சூழல் கல்வியாளர் எஸ்.எஸ். டேவிட்சன் வலியுறுத்தியுள்ளார்.

wildfire

By

Published : Sep 11, 2019, 8:45 AM IST

அதிக உயிரினங்கள் வாழக்கூடிய மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பில் நாகர்கோவில் ரோட்டரி கிளப் சார்பில் கன்னியாகுமரியில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் கல்வியாளர் எஸ்.எஸ். டேவிட்சன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உலகில் 15 இடங்களில் அதிக உயிரினங்கள் வாழக்கூடிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளதாகவும், குஜராத் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை உள்ள மலைப்பிரதேசங்களில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், அரியவகை குரங்குகள் போன்ற உயிரினங்கள் வசிக்கின்றன என்றார்.

இந்திய நாட்டின் வளம், நம்முடைய சூழல், பெருமை, பாரம்பரியம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு யுனெஸ்கோ நிறுவனம் மேற்குத் தொடர்ச்சி மலையை மிகவும் சிறந்த இடமாக அறிவித்துள்ளது, இதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்று தெரிவித்தார். புலிகளின் நகம் புலிகளின் எலும்பு ஆகியவை சூப் செய்ய பயன்படுத்துவதால் சீனாவில் இதற்கு அதிக கிராக்கி உள்ளது என்றும், சட்டவிரோதமாக இங்குள்ள புலிகளை பிடித்து அவற்றின் எலும்பு மற்றும் நகங்களை எடுத்து சீனாவிற்கு சமூக விரோதிகள் ஏற்றுமதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்ட காடுகள் செழிப்பானவை என்பதால் இதனை பாதுகாக்க வேண்டும் என்றும் அவற்றை பாதுகாக்க அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் பலவும் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், இவற்றை தடுத்து காடுகளை சீர்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

சுற்றுச்சூழல் கல்வியாளர் எஸ்.எஸ். டேவிட்சன் செய்தியாளர் சந்திப்பு

வனப்பகுதிகளில் அதிகளவில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது என்று கூறிய டேவிட்சன், வெளிநாட்டில் காடுகளில் தீப்பற்றினால் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைத்துவிடுகின்றனர், நாம் இன்றளவும் பழைய நடைமுறையையே பின்பற்றுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார். அறிவியல் வளர்ச்சியில் முன்னேறியுள்ள நிலையில், பழைய நடைமுறையை கைவிட்டு காட்டுத் தீயை அணைக்க அரசு நவீன யுக்திகளைக் கையாள வேண்டும் என்றும் கல்வியாளர் எஸ்.எஸ். டேவிட்சன் வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details