கன்னியாகுமரி:கன்னியாகுமரி அருகே அமைந்துள்ள நரிக்குளம் பாலத்தின் கல்வெட்டில் அமைக்கப்பட்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் முகம் காங்கிரஸ் கட்சியினரால் சிதைக்கப்பட்டுள்ளது என கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று(செப்.11) நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில் , “காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பிரச்னையை மறைப்பதற்காக யாத்திரை செல்கிறார்கள். நேரு குடும்ப ஒற்றுமைக்காக நடத்தப்படும் யாத்திரை தான் இது. தேசிய ஒற்றுமைக்காக நடத்தப்படும் யாத்திரை இது அல்ல. நான் பெரியார் மண்ணை விட்டுப்போகிறேன் என ராகுல் கூறுகிறார்.
நீ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரா அல்லது தேசியவாதியா ? ஏன் வஉசி, கட்டபொம்மன் பெயரை ஏன் சொல்லவில்லை. குமரியில் ராகுல்காந்தி யாத்திரையைத்தொடங்கிய போது கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி நரிக்குளம் பாலம் அருகே அமைக்கப்பட்டு இருந்த கல்வெட்டில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக சார்பில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால் குமரி மாவட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.
'கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதியவில்லையென்றால் பாஜக போராட்டம் நடத்தும்..!' - பொன்.ராதாகிருஷ்ணன் இதையும் படிங்க: ”இயேசு தான் உண்மையான கடவுள்” ராகுல் காந்தியிடம் சர்ச்சை