ஆழ்கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இரு மாவட்ட மீனவர்களிடையே மோதல் இருந்து வருகிறது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதிகளில் அரசு விதிகளை மீறி சில விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 30ஆம் தேதி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் இப்பிரச்னைக்கு தீர்வு எட்டும் வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லாமல் கடந்த ஐந்து நாட்களாக சின்னமுட்டம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் சின்னமுட்டம் துறைமுக விசைப்படகு சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீனவ சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனையில் கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் லேமக் ஜெயகுமார், பங்கு தந்தை ஜோசப் ரோமால்டு, பங்கு பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல், மீனவர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் அறிவுரையின்படி வரும் 9ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் சங்க நிர்வாகிகளுடன் சேரன்மாதேவியில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
தளவாய் சுந்தரம் செய்தியாளர் சந்திப்பு தற்போது தற்காலிகமாக இரு மாவட்ட மீனவர்களும் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு நாளை முதல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல உள்ளனர். நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் இப்பிரச்னைக்கு இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.