இந்துக்களின் முக்கிய விசேஷ நாள்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு தை அமாவாசை விழா இன்று(பிப்.11) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவின் தென்பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்து முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடலில் அதிகாலை முதலே புனித நீராட தொடங்கினர்.
கன்னியாகுமரி கடலில் புனித நீராடிய பக்தர்கள், ஈரத்துணியுடன் கடற்கரை, 16 கால் மண்டபத்தை சுற்றி அமர்ந்து இருந்த புரோகிதர்கள், வேதமந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை நடத்தி தர்ப்பணம் செய்தனர்.
அதன், பின்னர் ஈரத்துணியுடன் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், மூலஸ்தான நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடந்தன.