கன்னியாகுமரி: ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய நாட்களில் புண்ணிய நீர் நிலைகளுக்குச் சென்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று (ஜன.21) தை அமாவாசையை முன்னிட்டு, லட்சுமி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான தீர்த்தங்களைக் கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில், தங்கள் முன்னோர்கள் நினைவாகப் பலி கர்ம பூஜைகளைப் பொதுமக்கள் பலரும் செய்தனர்.
தொடர்ந்து இங்குள்ள வேத விற்பனர்களிடம் எள், பச்சரிசி, தர்பை, பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் புனித நீராடினர். இதற்காக குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலிருந்தும் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு வந்தனர்.