ஜனவரி 8ஆம் தேதி குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து துப்பு துலங்க அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பேர் வில்சனைக் கொலை செய்தது தெரியவந்தது.
இதனை அடிப்படையாக கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரைத் தேடப்படும் குற்றவாளிகளாக தமிழ்நாடு, கேரளா காவல்துறையினர் அறிவித்தனர். மேலும், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கொலை நடந்து ஆறுநாட்கள் கடந்த நிலையில் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படாதது காவலர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு காவலர்களிடம் கொலையாளிகள் சிக்காத சூழல் நிலவி வந்தால், விரைவில் இந்த வழக்கை நேரடியாக என்.ஐ. ஏ. அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.