கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த மார்ட்டின் என்பவருக்குச் சொந்தமான லூர்து அன்னை விசைப்படகின் மூலம் 11 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதேபோன்று பெஞ்சமின் பிராங்கிளின் என்பவருக்குச் சொந்தமான ஜெரிமியா என்ற விசைப்படகில் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த 11 மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
மேலும், அலெக்சாண்டரின் விசைப்படகில் 16 மீனவர்களும், மில்க் கியாஸ் என்பவருக்குச் சொந்தமான கார்மல் மாதா என்ற விசைப்படகில் 14 மீனவர்களும், வின்சென்ட் என்பவருக்குச் சொந்தமான செயின்ட் மேரிஸ் விசைப்படகில் 12 மீனவர்களும், மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த கிம்சமொள் விசைப்படகில் 14 மீனவர்கள் கொச்சி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.
இவ்வாறு ஆறு விசைப்படகுகளில் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த 78 மீனவர்கள் புயலுக்கு முன்பே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் இதுவரை கரை திரும்பாதது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் இதுவரை கரை திரும்பாத 78 மீனவர்களுக்கும் இது பேராபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால், தமிழ்நாடு, மத்திய அரசுகள் விரைந்து செயல்பட்டு கரை திரும்பாத 78 மீனவர்களைக் கண்டுபிடித்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட மீன்வளத் துறை அலுவலர்கள் கூறுகையில், "இதுவரை கரை திரும்பாத ஆறு படகுகள் மகாராஷ்டிரா எதிரே உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களைப் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவர கடலோரக் காவல்படை, இந்திய கப்பல் படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. எனவே, விரைவில் மீனவர்கள் பத்திரமாகக் கரை திரும்புவார்கள்" என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.