தமிழக அரசைக் கண்டித்து அரசுப் போக்குவரத்துக் கழக முன்னாள் ஊழியர்கள் போராட்டம்... நாகர்கோவில்:ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தலுக்கு முன் 100 நாட்களில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தருவதாக அளித்த வாக்குறுதியை ஆட்சி அமைத்து 500 நாட்களைத் தாண்டியும் நிறைவேற்றவில்லை எனக் கூறி ஊழியர் சங்கத்தினர் முழக்கமிட்டனர்.
86 ஆயிரம் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களின் டி.ஏ. உயர்வை வழங்கக்கோரி தமிழக அரசை கண்டித்து 300க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அகவிலைப்படி உயர்வு ஓய்வூதிய திட்ட பணபலன், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர், முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய போராட்டக் குழுவினர், அதிமுக ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், 500 நாட்களைக் கடந்தும் இதுவரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க:அரசாணை 149ஐ ரத்து செய்துவிட்டு தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!