கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (57). காவல் பணியில் 1986ஆம் ஆண்டு சேர்ந்த இவர், 2018ஆம் ஆண்டு முதல் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் அவர் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் காவல் பணிக்குச் சென்றார். இரவு 10 மணியளவில் அந்தப் பகுதியில் கேரளாவில் இருந்து வந்த ஸ்கார்ப்பியோ கார் ஒன்று சோதனைச் சாவடியைக் கடக்க முயற்சித்தது.
அதனை வில்சன் தடுக்க முயற்சித்தபோது, அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர், அவரை நோக்கி மூன்று முறை சுட்டுவிட்டு வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் மார்பு, வயிறு, தொடை ஆகிய இடங்களில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த அவரை, சக போலீசார் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி உதவி ஆய்வாளர் வில்சன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உள்ளிட்டோர் உடனடியாக சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். மேலும் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று வில்சனின் உடலைப் பார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் முதற்கட்டமாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. மேலும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் முடுக்கிவிடப்பட்டன.இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்தக் காட்சியில் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்செல்லும் கொலையாளிகளின் முகம் பதிவாகியுள்ளது. இறந்த காவலர் வில்சன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பைக் விபத்தில் படுகாயம் அடைந்து மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஒன்றாம் தேதி தான் மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.
இவருக்கு ஏஞ்சல் மேரி என்ற மனைவியும் ஆன்ட்ரீஸ் ரெமிஜா மற்றும் வினிதா என்று இரு மகள்களும் உள்ளனர். இதில் வினிதா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. வில்சன் வரும் மே மாதத்துடன் ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொம்மை துப்பாக்கியால் பரபரப்பு
காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, குமரி மாவட்டம் வழுக்கம்பாறையில் பொம்மை துப்பாக்கி ஒன்று சிக்கியது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காவலர்கள் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை