கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் மழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகமாகி வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது நேற்று முன்தினம் முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளமாகக் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதில், எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.