லட்சத்தீவு சிறையில் அடைக்கப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த வில்லியம் என்பவருக்குச் சொந்தமான ஆகாஷ் என்ற விசைப்படகில் வில்லியம், பெறின் கிளீட்டஸ், ஜோர்ஜ், பினு, சக்திவேல், கேரள மீனவர் முத்தலீப் ஆகிய எட்டு மீனவர்கள் கொச்சி மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு மீன்பிடித் தொழில் செய்துவந்தனர்.
பாதிரியார் சர்ச்சில் பேட்டி இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவர் வில்லியத்தை தொடர்பு கொண்டு லட்சத்தீவுப்பகுதியில் மீன்பிடிப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கான அனுமதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 25ஆம் தேதி லட்சத்தீவு பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது இந்திய கடலோர காவல் படையினர் விசைப்படகுடன் தமிழ்நாடு மீனவர்களையும் கைது செய்து லட்சத்தீவில் உள்ள சிறையில் அடைத்தனர்.
அப்போதுதான் உரிய அனுமதி பெற்றுத்தரமால் மன்சூர்தங்களைஏமாற்றியது அவர்களுக்கு தெரியவந்தது. கடந்த 75 நாட்களுக்கு முன்பு லட்சத்தீவு சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசு இவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்