கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நேற்று (அக்.20) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் அறுவடை செய்த நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையங்களில். நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருக்கிறது எனக் கூறி நிராகரிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி பேசுகையில், “குமரி மாவட்டத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பரசேரி, வில்லுக்குறி பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
எனவே, சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதுபோல் நெல் விவசாயிகளுக்கும் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வருகின்றன.
அசல் சம்பா ரகம் நமது மாவட்டத்தில் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் குறைவான மகசூல் கிடைக்கிறது. மற்ற ரக நெல்களை விவசாயம் செய்த விவசாயிகளுக்கு ஒன்றரை மேனி முதல் 2 மேனி வரை கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை கைவிட்டு வருகிறார்கள். பாரம்பரிய நெல் விவசாயத்தை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் மணிகளை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு சென்றால், அதிகாரிகள் அதனை எடுக்க மறுத்து வருகின்றனர். நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருப்பதால், அந்த நெல்மணிகளை உலர வைத்துக் கொண்டு வர விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனர்.
ஆனால், தற்போது மழை பெய்து வருவதால், நெல் மணிகளை உலர வைப்பதற்கு போதிய இடம் விவசாயிகளிடம் இல்லை. அரசு தரப்பிலும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளை உலர வைப்பதற்கான இடம் கொடுக்க வேண்டும். ஆனால் அரசு தரப்பில் அந்த வசதியும் செய்து கொடுக்காததால், நெல்மணிகளை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.