இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கந்தசஷ்டி விழா நவம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை (நவம்பர் 20) நடக்கிறது. இந்தமுறை கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சூரசம்ஹார நிகழ்ச்சிகளை அந்தந்த கோயில் வளாகத்துக்குள் நடத்த வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில் நடைபெற்றது.
இதில், பல்வேறு கோயில்களில் உள்ள கந்தசஷ்டி விழாக் குழுவினர் கலந்துகொண்டனர். நாகர்கோவில் ஆர்.டி.ஓ. மயில், கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது விதிமுறைகள், கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என ஆர்.டி.ஓ. மயில் கூறினார். "சிறிய அளவில் கூடிய ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முகக்கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
அப்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், "தமிழ்நாடு அரசு 100 பேர் வரை கோயில் விழாக்களில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஏன் இந்த கெடுபிடி செய்கிறீர்கள்? சிறிய அளவில் வாகனத்தை எப்படி அமைக்க முடியும்?
கோயிலுக்கு வெளியேதான் சூரசம்ஹாரம் நடத்த வசதியாக இருக்கும். முருகன் கோயில்களில் சூரனைவதம் செய்யும் நிகழ்வுதான் முக்கியமானதாகும். எனவே கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறோம். ஆனால் சூரசம்ஹார நிகழ்வுக்கு பக்தர்கள் வரக்கூடாது என கூறுவது முறையல்ல" என்றனர்.
இது தொடர்பாக அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆர்.டி.ஓ. மயில், ஏற்கனவே கந்தசஷ்டி விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விதிமுறைகளை அறிவித்துள்ளார். அதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி சென்றார். இதனால் சுமுக முடிவு எட்டப்படாமல், கூட்டத்தில் இருந்தவர்களும் வெளியேறினர்.