சப்ளை செய்வதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் தென் தாமரை குளத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) மற்றும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நெட்டூரைச் சேர்ந்த கணேசன் (45) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இரண்டு பேரும் பணியில் இருந்தபோது உணவகத்தில் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது சப்ளை செய்வதில் ராதாகிருஷ்ணனுக்கும், கணேசனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கணேசன் உணவகத்தில் இருந்த கத்தியை எடுத்து திடீரென ராதாகிருஷ்ணனை சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதும் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மார்த்தாண்டம் காவல் துறையினர்,
ராதாகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், தப்பியோடிய கணேசனை பிடிக்க காவல் ஆய்வாளர் காளியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கனேசனை பல இடங்களில் தேடி வந்தனர். கணேசனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் என்பதால், அவர் அங்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது அதன் அடிப்படையில் காவல் துறையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பின்னர், திருச்செந்தூரில் பதுங்கியிருந்த கணேசனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்ட கணேசன் கொலை நடந்த உணவகத்தில் 10 வருடங்களாக வேலை பார்த்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து விலகி வேறு உணவகத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
கொலை செய்யப்பட்டு இறந்து போன ராதாகிருஷ்ணன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் இந்த உணவகத்திற்கு வேலைக்குச் சேர்ந்துள்ளார். இங்கு இருவருக்கும் இடையே வேலை விஷயமாக ஒத்துப் போகவில்லை. அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. ஆனால், நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்து விட்டது. அதாவது வாக்குவாதம் முற்றிய போது ராதாகிருஷ்ணன், கணேசனை தாக்க முற்பட்டுள்ளார்.
அதற்குள் கணேசன், ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டார். பின்னர் திருச்செந்தூர் பேருந்தில் ஏறி, அவர் அங்கு சென்று பதுங்கியுள்ளார். இதனை கண்காணித்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
இதனிடையே உணவகத்தில் ராதா கிருஷ்ணனை துரத்தி துரத்தி கணேசன் குத்தி கொலை செய்யும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:மருத்துவர் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?