தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் கொலை வழக்கில் திருப்பம்: பயங்கரவாதிகளுடன் தொடர்பா? - Kumari District News

கன்னியாகுமரி: சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இருவரும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

காவலர் கொலை வழக்கில் திடிர் திருப்பம்
காவலர் கொலை வழக்கில் திடிர் திருப்பம்

By

Published : Jun 8, 2020, 2:52 AM IST

Updated : Jun 8, 2020, 3:06 AM IST

குமரி மாவட்டம் களியக்காவிளை கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி இரவில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் (57) பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பயங்கரவாதிகள் வில்சனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக திருவிதாங்கோடு அப்துல் சமீம் (29), கோட்டார் தவுபிக் (27) ஆகிய 2 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கேரளா வழியாக கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியை ரயிலில் கடக்கும்போது கர்நாடக காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பயங்கரவாதிகளையும் காவல் துறையினர் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது 2 பேருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மூலம் நெல்லை, காயல்பட்டினம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மக்களோடு மக்களாக கலந்திருந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள்.

மேலும், இவ்வழக்கின் குற்றவாளிகளான அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோருக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதற்காக தக்கலை காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனி கட்டடம் என்.ஐ.ஏ-வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று தக்கலையில் உள்ள காவல் நிலைய தனி கட்டடத்தில் பணிகளை தொடங்கிய 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ விசாரணைக் குழு முதல்கட்டமாக அப்துல் சமீமின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து தவுபிக்கின் வீடு, களியக்காவிளையில் சம்பவ நடந்த இடம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Last Updated : Jun 8, 2020, 3:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details