காவல்துறை மரியாதையுடன் புறப்பட்ட முன்னுதித்த நங்கை அம்மன் கன்னியாகுமரி:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து அம்மன் சுவாமி சிலை ஊர்வலமாக மேளம் தாளங்கள் முழங்க தமிழக - கேரள மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதை உடன் புறப்பட்டுச் சென்றது. சுவாமி ஊர்வலத்தை வழி நெடுக்கிலும் ஏராளமான மக்கள் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்தபோது, அதன் தலைநகராக தக்கலை அருகே உள்ள பத்மநாதபுரம் இருந்து வந்தது. இங்கு மன்னர்கள் காலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பின்பு நிர்வாக வசதிக்காக இதன் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின்பு, நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு சென்று அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகளுடன் வைத்து பூஜைகள் செய்வர்.
பின்னர், பத்து நாள்கள் விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் நவராத்திரி விழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி இன்று (அக்.11) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா 15ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. பத்து நாட்கள் நடைபெறும், இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.
அந்த வகையில், சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்தை நங்கை அம்மன் சிலை கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க தமிழகம் - கேரளா இரு மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டுச் சென்றது. இன்று மாலை இந்த சுவாமி விக்ரம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதே போன்று, வேளிமலை குமாரசாமி சிலையும் இன்று வந்து சேர்ந்துவிடும். நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மூன்று சாமி சிலைகளும் பிரம்மாண்ட ஊர்வலத்துடன் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும். இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட சுவாமி ஊர்வலத்தை வழி நெடுவிலும் ஏராளமான மக்கள் பூக்கள் பூஜை பொருட்கள் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:காவிரி விவகாரம்; டெல்டா மாவட்டங்களில் கடைகளை அடைத்தும், அலுவலகங்களை முற்றுகையிட்டும் போராட்டம்!