கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பி.எட். பட்டப்படிப்பை முடித்த 25 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் 15 மாணவ மாணவிகளுக்கு தனி வகுப்புகளை (டியூஷன்) எடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (அக். 24) அந்தப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டினருகிலுள்ள பதினாறு வயது மாணவர் ஒருவர் அந்தப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்தப்பெண் சத்தம் போடவே, 'உன்னை உயிரோடு விட்டால் நான் உன்னிடம் தவறாக நடக்க முயன்றதை வெளியே சொல்லிவிடுவாய்' என்றுகூறி தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அந்தப்பெண்ணின் தலையிலும் அடிவயிற்றுப்பகுதியிலும் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
வலியால் அலறித்துடித்த பெண்ணின் சத்தத்தைக்கேட்டு அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தப்பியோடிய மாணவனை கைது செய்த காவலர்கள், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தற்போது சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.