ஸ்பெயின் உலக இரும்பு மனிதன் போட்டிக்கு ஸ்ட்ராங் மேன் கண்ணன் தேர்வு.. அரசு சார்பில் உதவி கிடைக்காததால் வேதனை.. கன்னியாகுமரி: உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ‘ஸ்ட்ராங் மேன்’ போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்களது உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்ணன் என்ற M.A பட்டதாரி ஒருவர் இந்தியாவின் இரும்பு மனிதனாக வலம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாமரை குட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது 90 கிலோ உடல் எடைக்கு அதிகமான எடை கொண்ட பெருட்களைத் தூக்கி சாதனைகள் படைத்து வருகிறார். மேலும், இளம் வயதில் இருந்து உடற்பயிற்சி செய்து பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
பல்வேறு எடை பிரிவு போட்டிகளில் பங்கேற்று கனரக வாகனங்களை தனது உடலால் இழுத்து மூன்று முறை ஸ்ட்ராங் மேன் ஆஃப் இந்தியா பட்டம் வென்றுள்ள இவர், கடந்தாண்டு நாகர்கோவில் அருகே விசுவாசபுரம் நான்கு வழிச்சாலை பகுதியில் 13.5 டன் கிலோ எடையுள்ள 14 டயர் கொண்ட லாரியை கயிற்றால் கட்டி, 4 நிமிடங்களில் 111 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தார்.
அதனைத் தொடர்ந்து 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்டர் தூக்கி நடந்து சென்று உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், முதல் முறையாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இவர், 85 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
அதுவரை தமிழகத்தின் இரும்பு மனிதன் என பெயர் எடுத்த கண்ணன், இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற பெயரினைப் பெற்றார். இதன் மூலம் உலக அளவில் நடைபெறும் இரும்பு மனிதன் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொள்ள தேர்வானார். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி, வரும் அக்டோபர் மாதம் 13,14,15 ஆகிய தேதிகளில் ஸ்பெயினில் நடைபெறுகிறது.
இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் கண்ணன், இதன் தொடர்ச்சியாக இன்று (செப்.10) கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பயிற்சியினை மேற்கொண்டார். குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் விதிமுறைகளை பின்பற்றி அதன் அடிப்படையில், ஐஸ் லாண்டு கிராஸ் 90 கிலோ எடை கொண்ட பளுவை 40 மீட்டர் தூரம் தூக்கி நடந்தார்.
இதனை அடுத்து 90 கிலோ எடையை தூக்கி லாக் பிரஸ் செய்தார். மேலும் 180 கிலோ எடையை கொண்ட பளுவை தூக்கி நடக்கும் ஃபார்மர் வாக், 50 கிலோ எடை கொண்ட பளுவை தூக்கும் ஒன் ஆம் தம்பெல், 100 கிலோ எடை கொண்ட இளவட்ட கல் தூக்குவது உள்ளிட்ட 5 வித பிரிவுகளில் பயிற்சி மேற்கொண்டார்.
கண்ணனின் இந்த தீவிர பயிற்சியைக் கண்ட பார்வையாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கைதட்டி ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தினார். இது குறித்து கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எதிர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் போட்டியில் பங்கேற்க கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
நிச்சயம் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்” என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர், இதற்காக தமிழக அரசு சார்பில் தான் கோரிக்கை வைத்தும் கூட, எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை என வேதனை தெரிவித்தார்.
இதையும் படிங்க:"கண்டிப்பு, தண்டிப்பு இல்லாததே மாணவர்கள் சீரழிவுக்கு காரணம்" - ஆசிரியர், மாணவர்கள் கலந்துரையாடலில் ஆளுநர் கருத்து!