கன்னியாகுமரி:நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி, நேற்று (டிச.03) இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாகர்கோவிலின் மையப் பகுதியான கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் உள்ளது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் துவங்கி, 10 நாட்கள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஆடம்பர கூட்டு திருப்பலி, முதல் திருவிருந்து திருப்பலி, குணமளிக்கும் திருப்பலி, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், மலையாள திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய அம்சமான தேர் பவனி நிகழ்ச்சி, 10 வது நாளான நேற்று இரவு தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சவேரியார் பேராலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர். மேலும், தேரில் உருண்டு பிராத்தனை செய்யும் நிகழ்சியில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து, 11 வது நாள் திருவிழாவான இன்று (டிச.04) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.