கரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் குமரி மாவட்ட வளர்ச்சிப்பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.,11) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவரை மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் குமரி மாவட்ட ஆட்சியர் எம் அரவிந்த் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் திரண்டிருந்த அதிமுகவினர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர். ஆரல்வாய்மொழி, தோவாளை, வெள்ளமடம், வடசேரி என நாகர்கோவில் செல்லும் சாலையில் 9 இடங்களில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.