குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி முதல் கன்னியாகுமரி வரையிலான நடைபெற்ற சமாஜ்வாடி பிரசார வாகன விழிப்புணர்வு பயண நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவருமான சுப. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சிஏஏ விவகாரத்தில் மக்களின் அச்சத்தைப் போக்க ரஜினிகாந்த் யார்? பிரதமரா? முதலமைச்சரா? அவர் ஒரு கவுன்சிலர்கூட கிடையாது. சாதாரண நடிகர் அவ்வளவே. வருடம் ஒரு படம் நடித்து பணம் சேர்க்கிறார். பின் வரி ஏய்ப்பு செய்கிறார். சென்னையில் சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்.
மூன்று மாதங்களாகப் போராடும் மக்களை அவர் சந்தித்தாரா? அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்த பிறகு அவர் கருத்து கூறட்டும். அதுவரை வாயை மூடிக்கொண்டு சினிமாவில் நடித்தால் அவருக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லது. மதகுருமார்கள் ரஜினியைச் சந்தித்தது தவறு.
தலிபான்களுடன், அமெரிக்க அதிபர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால், சிஏஏவுக்கு எதிராக இங்கு போராடும் மக்களிடம் பேச மோடி மறுக்கிறார். இந்தியாவில் 10 கோடி இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் போராட அனுமதித்தார்கள். அவர்களிடம் ஜனநாயகம் இருந்தது. ஆனால் பாஜகவிடம் சகிப்புத்தன்மை இல்லை.
மக்கள் ஒரு மிகப்பெரிய புரட்சிக்குத் தயாராக உள்ளனர். ஒரு இருண்ட காலம் இந்தியாவைச் சூழ்ந்துள்ளது. சிஏஏ குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையான புரிதல் கிடையாது.
சிஏஏவுக்கு ஆதரவாக எதற்கு வாக்களித்தோம் என அவருக்கே தெரியாது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பல்வேறு மாநிலங்களிலுள்ள அரசு இதை எதிர்க்கிறார்கள். ஆனால் இங்கே இருப்பவர்கள் தங்கள் சொத்துகளைப் பாதுகாக்க அரசை நடத்துகிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க:'சிஏஏ பற்றி ரஜினிகாந்த்துக்கு எதுவும் தெரியாது' - ஜவாஹிருல்லா கடும் தாக்கு