வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை கொலை செய்த மகன் - தந்தையை கொன்ற மகன்
கன்னியாகுமரி: நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை பாலிடெக்னிக் மாணவர் கம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வெள்ளமோடி பகுதியைச் சேர்ந்தவர் லிங்கதுரை (54). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் சூர்யா (19). இவர் அதே பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நேற்று ஜூலை 21ஆம் தேதி சூர்யா பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்க சென்றனர்.
பின்னர் இரவு கண்விழித்த சூர்யா வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தந்தையை பெரிய கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த லிங்கதுரை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். பின் அங்கிருந்து சூர்யா தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தை பார்த்த லிங்கதுரையின் மனைவி, மகன்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ராஜாக்கமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், லிங்கதுரையின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு ஆய்வுக்காகஅனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து தப்பி ஓடிய சூர்யாவை காவலர்கள் தீவிரமாக தேடி கண்டுபிடித்தனர். பின் சூர்யாவை ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது சூர்யா முன்னுக்குப் பின் முரணாண தகவல்களை தெரிவித்து வருவதாகவும் தந்தையை கொன்றதற்கான காரணத்தை கூறவில்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.