கன்னியாகுமரி மாவட்டம், வேங்கவிளையைச் சேர்ந்தவர் செல்வராஜ்(60). இவரது மகன் வினு (34) கூலி தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த காரணத்தால் இவரது மனைவி சிலவருடங்களுக்கு முன்பு இரு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் வினு, தனது பெற்றோரிடம் பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு குடி போதையில் இருந்த வினு தனது தந்தை செல்வராஜிடம் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது வினு திடீரென வீட்டில் இருந்த கத்தியால், தனது தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக, களியக்காவிளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வினுவை கைது செய்தனர்.
தந்தையை கொன்ற மகனுக்கு 10ஆண்டு சிறை. இந்த கொலைவழக்கு நாகர்கோவில் முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கோமதிநாயகம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டதால், வினுவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.