தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2020, 1:20 PM IST

ETV Bharat / state

தவறான ஊசியால் தாய் உயிரிழப்பு: மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மகன் மனு!

கன்னியாகுமரி : ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலி செலுத்திய தவறான ஊசி மருந்தால் தாய் மரணமடைந்ததையடுத்து, இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மகன் மனு அளித்துள்ளார்.

தவறான ஊசியால் தாய் உயிரிழப்பு
தவறான ஊசியால் தாய் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு அடுத்த செம்மங்கலை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ் (24). இவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “என் தாயார் சந்திரிகா (50), கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

அங்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி ரத்தம் செலுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 26ஆம் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவருக்கு கரோனா இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்ததால் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், கடந்த 3ஆம் தேதி அவருக்கு கரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்ததையடுத்து அன்றைய தினமே மாலை வழக்கமான வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று (அக்.04) காலை என் தாயாருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மறுநாள் வீட்டுக்கு போகலாம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று (அக்.04) மாலை 5 மணியளவில் நான் அருகில் இருக்கும்போது செவிலி ஒருவர் என் தாயாருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தினார். மருந்து செலுத்திய சுமார் ஐந்து நொடிக்குள் என் தாயாருக்கு கை, கால்கள் இழுத்துக்கொண்டது. நான் உடனே செவிலியரை அழைத்தேன், அவர்கள் வந்து பரிசோதனை செய்து பார்த்தார்கள். ஆனால், அதற்குள் என் தாயார் இறந்துவிட்டார். என் தாயாரை காலையில் மருத்துவர் வீட்டிற்குச் செல்லலாம் எனக்கூறிய நிலையில் அவர் இறந்தது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் அளிக்கப்பட்ட மனு

எனவே செவிலி செலுத்திய ஊசி மருந்தால்தான் என் தாயார் இறந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். என் தாயாருக்குத் தவறான மருந்தை செலுத்தி, அவரைக் கொன்றுவிட்டார்கள். எனவே அவரை கொலை செய்த செவிலி மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் உயிரிழந்த இளம்பெண் : உடலை வாங்க மறுத்த உறவினர்கள்!

ABOUT THE AUTHOR

...view details