தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 7, 2023, 10:46 PM IST

ETV Bharat / state

திராவிட மாடல் ஆட்சிக்கு கேடு விளைவிக்க சிலர் முயற்சி - முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு கெடுதல் வளைவிக்க சிலர் முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று (மார்ச் 7) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சற்றேறக்குறைய 22 மாதங்கள் ஆகியிருக்கிறது. எனவே, இந்த 22 மாதங்களில் நாம் இந்த சமுதாயத்திற்கு, இந்தத் தமிழ்நாட்டுக்கு, மக்களுக்கு ஆற்றியிருக்கும் அரும் பணிகள் எல்லாம் எல்லோரும் போற்றும் வகையில் அமைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. கலைஞரின் திருவுருவச் சிலையினை இன்றைக்கு நாம் நாடு முழுவதும் ஆங்காங்கு தொடர்ந்து திறந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய மறைவிற்குப் பிறகு, முதன்முதலில் அவரால் உருவாக்கப்பட்ட சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தலைவர் கலைஞரின் குருகுலமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஈரோட்டில் திறந்து வைத்தோம். அதற்குப் பிறகு, கலைஞரை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவின் காஞ்சிபுரத்தில் சிலையை திறந்து வைத்தோம். இந்தச் சிலையினை திறந்து வைத்திருக்கும் நேரத்தில் நான் உங்களை கேட்டுக் கொள்ள விரும்புவது, எந்த லட்சியத்திற்காக தலைவர் கருணாநிதி, அறிஞர் அண்ணா பாடுபட்டு இருக்கிறார்களோ, அந்த லட்சியத்தை மனதில் ஏற்றுக்கொண்டு நாம் நம்முடைய கடமையை ஆற்றிட வேண்டும் என்பதுதான்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும் நாம் நம்முடைய கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். எனவே இன்றைக்கு நம்மைப் பார்த்து பாராட்டக்கூடியவர்கள், வாழ்த்தக்கூடியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால் அதேநேரத்தில் இன்றைக்கு நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், இந்த ஆட்சி இப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறதே, ‘திராவிட மாடல்’ என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் ஒரு கவர்ச்சிகரமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, எனவே, தொடர்ந்து இந்த ஆட்சியைவிட்டால் நம்முடைய பிழைப்பு என்னாவது? என்ற நிலையில் நம்மீது புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து, இந்த ஆட்சியை அப்புறப்படுத்தவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை எல்லாம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். எங்காவது, கலவரத்தை ஏற்படுத்தலாமா? சாதிக் கலவரத்தை தூண்டலாமா? மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா? ஆங்காங்கே இருக்கும் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்தலாமா? என்றெல்லாம் திட்டமிட்டு அந்தக் காரியத்தில் இன்றைக்கு அவர்கள் எல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் நம்மீது சொல்லப்படும் தேவையற்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அதிகம் பதில் சொல்வதில்லை. ஏனென்றால், அதைச்சொல்லி நேரத்தை வீணடிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதன் மூலமாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் அந்தப் பிரசாரத்தை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். யார் யாரெல்லாம் அதற்குப் பதில் சொல்ல வேண்டுமோ, அவர்களை வைத்து நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

எனவே, நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைக்க வேண்டும். நாடு முழுவதும் இருக்கும் மதச்சார்பற்ற தலைவர்கள் பா.ஜ.க ஆட்சியை ஒழிக்க வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமை உணர்வோடு தேர்தல் களத்தில் ஈடுபட வேண்டும்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: கரையும் பாஜக, துளிரும் அதிமுக.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details