கன்னியாகுமரியில் 6 மலை கிராமங்களுக்கு சூரிய மின் இணைப்பு கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 47 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் காணி பழங்குடியின ஆதி மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து மாறாமலை, முகளியடி மலை, புதுப்பாறை, வேட்டாவிளை, களப்பாறை, புன்னமூட்டுதேரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு படகு மூலமாகத்தான் செல்ல வேண்டும்.
இந்த மலை கிராமங்களில் குடியிருந்து வரும் மக்கள், தங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், இந்த மலை கிராமங்களுக்கு பல வருடங்களாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, இந்த கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
ஆனால் அந்த பகுதி, மின் இணைப்பு கொடுப்பதற்கான மின் உபயோகப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியாத பகுதியாக இருந்ததால், மின் இணைப்பு வழங்க மின்சாரத் துறை மறுப்பு தெரிவித்தது. இதனை அடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் செல்கோ சோலார் லைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு, சோலார் லைட் பொருத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக பேச்சிப்பாறை ஜீரோபாயின்ட் பகுதியிலிருந்து, அணை நீர்படிப்பு பகுதியில் சுமார் 1 மணிநேரம் படகில் ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பயணம் செய்ததுடன், இந்த மலை கிராமத்திற்கு நீண்ட தூரம் நடத்து சென்று மலைவாழ் மக்களுடன் கலைந்துரையாடினர். பின்னர், 6 காணி மலைவாழ் கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 79 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியானது நேற்று (டிச.15) மணலோடை மலைவாழ் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக நமது மாவட்டத்தில் வசிக்கும் காணி பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா அதிக அளவில் வழங்கப்பட்டதோடு, மலைவாழ் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
வன உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், புதிய பள்ளி கட்டடங்கள், சுகாதாரம், குடிநீர், வாகன வசதி உள்ளிட்ட மலைவாழ் மக்களின் தேவைகளை அறிந்தும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துதல் குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பழங்குடியின பிரதிநிதிகளின் கோரிக்கை என்ன என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதோடு, வன பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு என்னென்ன ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பணிகளை மேற்கொள்ள மலைவாழ் மக்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் பகுதியில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், கடந்த முறை ஜீலை மாதத்தில் 2 குடியிருப்பு பகுதிகளான சிலாங்குன்று, கடுவாவெட்டி ஆகிய பகுதிகளில் செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் 2 வீடுகளில் வசிக்கும் 9 குடும்பங்களுக்கு சோலார் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இத்திட்டத்தினை அனைத்து மலைவாழ் கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் செல்கோ சோலார் லைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவியுடன், படிப்படியாக ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, வனத்துறை மற்றும் மின்சாரத் துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தொடர்ச்சியான மின் இணைப்பு வழங்க முடியாத பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றில் மாறாமலை, முகலியடிமலை, புதுப்பாறை, வேட்டாவிளை, களப்பாறை, புன்னமூட்டுதேரி ஆகிய 6 கிராமங்களைச் சேர்ந்த 79 குடும்பங்களுக்கு, இன்று பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து படகு மூலமாக சுமார் 35 நிமிடம் பயணம் மேற்கொண்டு, மாறாமலை கிராமத்தில் இது நாள்வரை மின்சாரம் இன்றி வசிக்கும் ராதிகா என்பவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று, சோலார் மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 10 லட்சம் ரூபாயும், செல்கோ சோலார் லைட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் 3.53 லட்சம் ரூபாயும் என மொத்தம் 13.53 லட்சம் ரூபாய் மதிப்பில், 78 மலைவாழ் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த சோலார் மின் இணைப்பு தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படக் கூடியது.
இந்த சோலார் மின் இணைப்பு பொருத்தப்பட்டதினால், மலைவாழ் காணி இன மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் குழந்தைகள் சிரமமின்றி கல்வி பயில்வதற்கும், பயமின்றி வெளியே நடமாடுவதற்கும் பேருதவியாக இருக்கும். மேலும், காணி மலைப் பகுதியைச் சேர்ந்த 50 வீடுகளுக்கு இந்த நாள் வரை மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை.
இது குறித்து காணி மலைவாழ் பிரதிநிதிகள் வனத்துறை மற்றும் மின்சாரத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும், மலைவாழ் மக்களின் கிராமசபையினைக் கூட்டியும், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த 50 வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் பட்சத்தில், குமரி மாவட்டம் முழு மின்சார வசதி உள்ள வீடுகளாக மாறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிலாங்குன்று மலைப்பகுதியில் வசித்து வரும் காணி பழங்குடியின மக்கள், தாங்கள் தங்குவதற்கு புதிய வீடு மற்றும் அடிப்படைத் தேவையான தண்ணீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்றித் தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட வனத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எயிட் இந்தியா (AID INDIA) சார்பில், சிலாங்குன்று மலைப்பகுதியில் வசிக்கும் உஷா ராணி, செல்லம்மா ஆகிய இரண்டு பயனாளிகளின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டுவதற்கான பணிகள் கடந்த 27.07.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டு, தற்போது பணிகள் நிறைவுற்றுள்ளது.
விரைவில் இரண்டு வீடுகளின் பணிகளும் முடிந்து பயனாளிகளிடம் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்வதோடு, மலைவாழ் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் கேப்சூல் மூலம் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!